29.10.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 2

பொதுக்கருத்து தங்களது தீர்ப்பினை வழிநடத்தி விடக்கூடாது என்பதற்கு சில நீதிபதிகள் செய்தித்தாள்களை படிப்பதை கூட நீதிபதிகளாக இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்தனராம். சமுதாய நிகழ்வுகள் மீது தன்னுடைய தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு ஒரு முற்றும் துறந்த முனிவரின் (heretic) மனநிலையில் வாழ்ந்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால், உலகம் சுருங்கி வரும் விஞ்ஞான யுகத்தில் இவ்வாறான வாழ்க்கை சாத்தியமல்ல. எனவே நீதிபதிகள் முற்றிலும் சார்பற்ற நிலை கொண்டவர்களாக இருத்தல் என்பது இயலாத ஒன்று. இயற்பியல் விதிகளின் படியே முழுமையான ஒரு நிலை (absolute state) என்பது சாத்தியமல்லாதிருக்கும் பொழுது, ஒர் கட்டுக்குள் அடக்க முடியாத (unpredictable) மனித மனங்களை ஆராயும் நீதி பரிபாலனம் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றில்லாமல் அதன் பயணம் அவ்வாறான நிலையினை நோக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அளவோடு நமது எதிர்பார்ப்புகள் திருப்தியுற வேண்டும்.

ஆனால் அந்த பயணத்தை வழிநடத்துவதற்கு பொதுக்கருத்துகள் பயன்படுகையில், பொதுக்கருத்தின் பல்வேறு வகையான வெளிப்பாடுகள் தேவையான ஒன்றுதான். நீதிமன்றங்கள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகளில் தீர்ப்பு கூறுகின்றன. மிக அரிதான தீர்ப்புகளைத் தவிர மற்றவை இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாவதில்லை. ஏன், ஜெயலலிதா டான்ஸி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொழுது கூட நீதிபதிகள் எதேச்சையாக அறிவுறுத்திய ஒரு வரியினைத் தவிர தீர்ப்பினை அனைவரும் அறுத்து கூறு போட முயலவில்லை. அந்த தீர்ப்பினைக் குறித்து எழுதலாம் என்று அதனை முழுவதும் படித்த நான், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளிக்கும் குற்றவியல் முறைகளின்படி (criminal jurisprudence) முறையான தீர்ப்புதான் என உணர்ந்தேன். ஊடகங்களால் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட அந்த ‘மனச்சாட்சி’ கருத்து கூட நிலத்தினை வாங்கியதில் உள்ள வரம்பு மீறலை கருத்தில் கொண்டு நிலைத்தினை திருப்பிக் கொடுப்பதினைப் பற்றியதே தவிர குற்றம் என்பதனை பொறுத்ததல்ல. நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் முன் வைக்கப்படும் பொருட்களையும் தாண்டி வெளியில் நடப்பதையும் நீதிபதிகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ கவனத்தில் கொள்கையில் விவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் அவசியமான ஒன்றுதான்.

உதாரணமாக, டெல்லியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நாளிதழ் செய்தியினை ஒரு பொது நல வழக்கின் மனுவாக ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை (summons) அனுப்புகிறது. புதிதாக உருவாகியுள்ள சட்டவியலில் இது முறையான ஒன்றுதான். ஏனெனில் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் மறுக்கப்படுவது அவர்கள் ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life) என்ற அடிப்படை உரிமையினை மீறியதாகும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன. பின்னர் அரசு எந்த எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகையில், அரசுப் பணியினை (executive functions) நீதிமன்றம் மறைமுகமாக கையிலெடுக்கிறது. அவ்வாறான நிலையில் அந்த தீர்ப்பின் மீதான விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுவதை தேவையில்லை என்று கூற முடியுமா?

ஏனெனில் அரசியல்வாதிகளைப் போலன்றி பிரச்னையின் அனைத்து பரிமாணங்களையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளுதல் இயலாது. ஒருவேளை பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது நோய் பரவ காரணம் என்று கூறப்பட்டு, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். டெல்லியிலுள்ள குடிசைவாசிகள், கழிப்பிடமே இல்லாத பொழுது நாங்கள் எங்கே செல்லுவோம் என்று ஆர்ப்பாட்டம்தான் நடத்த இயலும். செய்தித்தாளின் செய்தியினைப் போல ஆர்ப்பாட்டமும் நீதிமன்றத்திற்கு ஒரு செய்திதான்.

மீண்டும் கூறுவதனானால், அப்சல் வழக்கில் கூட அவர் குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பெழுத வேண்டும் என்று கூறுவது சரியானதாயிருக்காது. யார் யாரோ நகர்த்திய காய்களில், வேறு வழியின்றி பங்கு கொண்ட பகடைக்காயாக அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக மரண தண்டனை அளித்திருக்க வேண்டுமா என்பது ஒரு விவாதம். தீர்ப்பில் மரண தண்டனைக்கான காரணங்களை நீதிபதிகள் அடுக்கியதில் பொதுக்கருத்தினை கருத்தில் கொண்டதில் இவ்வகையான விவாதம் எழுவது இயல்பே! அடுத்த விவாதம் மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து. இதற்கு பதில் கூற வேண்டியது அரசாங்கமே தவிர நீதிமன்றங்கள் இல்லை.

***
to be continued...

6 comments:

Sivabalan said...

மிக அருமையான பதிவு.

பதிவுக்கு நன்றி

PRABHU RAJADURAI said...

வஜ்ரா,

"அப்சலுக்கு தூக்கு வழங்கியதில் ஞாயம் உள்ளதா இல்லையா ?"

என்று தாங்கள் கேட்ட கேள்விக்கு அப்சல், மரணத்தின் விளிம்பில் என்ற என் பதிவிலும் இந்த பதிவிலும் பதிலினை தேடலாம்.

ஆதிரை,

ஜூரர்கள் முறை இந்தியாவில் எழுபதுகள் வரை இருந்தது. அது இங்கிருந்து போனதற்கு காரணமான ஒரு வழக்கு குறித்து நானாவதி என்ற தலைப்பில் ஒரு பதிவு உண்டு

மற்றபடி நண்பர்களுக்கு,

இவ்விதமான கருத்துகளை நான் மிக்க தயக்கத்துடந்தான் இங்கு எழுதுகிறேன். இதில் எனது சார்பு நிலை இருப்பதை மறுக்கவில்லை. எதிர் கருத்துகளை, எனது எண்ணங்களை செழுமைப்படுத்த உதவலாம் என்ற வகையில் நான் திறந்த மனதுடன் வரவேற்கிறேன். ஆனால், தொடர்ந்து விவாதம் செய்வதற்கு பலரைப்போல எனக்கு இணைய வசதி இல்லை. தயவு செய்து, இணையத்திற்கு வெளியே நமக்கு ஒரு வாழ்க்கை இருப்பதை நினைத்து தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிவிட வேண்டாம்.

க்ரீமி லேயர் கிளைமாக்ஸில்தான்...

நன்றி

பிரபு ராஜதுரை

Sridhar V said...

பிரபு அவர்களுக்கு,

மிகத் தெளிவாக எழுதி இருக்கிறீர்க்ள். நியாயமாகவும், அனுபவத்தோடும், ஆழ்ந்த புரிதலோடும் நீங்கள் எழுதியதை படித்தால் பல கேள்விகளுக்கு விடை தெரிகிறது.

எதனால் இந்த வழக்கிற்கு இத்தனை கவனிப்பு என்று நான் மண்டையை உடைத்துகொண்டிருந்தேன். உங்கள் பதிவில் அதற்கு விடை இருக்கிறது (என்று நான் நினைக்கின்றேன்).

என்னுடைய இன்னொரு attraction உங்கள் பதிவின் தலைப்பும் (மணற்கேணி) அதற்கு தகுந்தாற்ப்போல் நீங்கள் கருத்து செறிவாக எழுதும் எல்லா பதிவுகளும்.

உங்கள் முயற்சிகளுக்கும், வாசகர்களுக்காக நீங்கள் செலவிடும் நேரத்திற்கும் மிக்க நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
இத்தொடருக்கு நன்றி. பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு. எனக்கு ஜனநாயகத்தின் மற்ற தூண்களான legislature, executive, and press மீதுள்ள அதே விமர்சனம் தான் judiciary மீதும். அரசியல்வாதிகளைக் கடுமையாக விமர்சிக்கும் உயர்-நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரவர்க்கமும், நீதிபரிபாலனத் துறையும் புனிதபிம்பங்கள். ஏனெனில் இந்த இருதுறைகளுமே, உயர்-நடுத்தர வர்க்கத்தின் நலன்களைப் பேணுபவை. மனநிலையைப் பிரதிபலிப்பவை. இந்த இருதுறையினரையும் விட அரசியல்வாதிகள் மீது எனக்கு கரிசனம் உண்டு. Politicians are more accountable to the public but not judiciary and bueracracy.

Muthu said...

இரண்டு பாகங்களும் அருமை.தொடருங்கள்.சில கேள்விகள் உள்ளன.கடைசியில் கேட்கிறென்.

aathirai said...

நீதிபதிகளை விசாரிக்கும் சட்டம் பற்றி விடுதலை ஒரு
தலையங்கம் எழுதியிருக்கிறது. இந்த பதிவுடன் தொடர்புடையது
என்று நினைக்கிறேன்.

http://viduthalai.com/20061030/news04.htm