12.11.10

கோயம்புத்தூர் டுமீல்! டுமீல்!!

2008ம் ஆண்டு வாரங்கல்லில் பொறியியற் கல்லூரி மாணவி ஸ்வப்னிகாவும் அவளது நண்பியும் மூன்று இளைஞர்களால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 21 நாட்கள் போராடிய ஸ்வப்னிகா மரித்துப் போனார். ஆனால் அதற்கு முன்பாகவே, கைது செய்யபப்ட்ட மூன்று இளைஞர்களும் புலன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சென்ற காவலர்களை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆந்திர மக்களின் கோபம் கைதிகள் கொல்லப்பட்டதால் தணிக்கப்பட்டது.


***

2010ம் ஆண்டு கோயம்புத்தூரில் 9 வயது முஸ்கானும் அவளது தம்பியான ரித்திக்கும் வாகன ஓட்டியால் பணத்துக்காக கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்து சில நாட்களில் புலன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி மோகன்ராஜ் காவலரை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

1978ம் ஆண்டு புது தில்லியில் கீதா சோப்ரா என்ற 16 வயது சிறுமியும் அவளது தம்பியானா சஞ்சய் சோப்ரா என்ற 14 வயது சிறுவனும் பில்லா, ரங்கா என்ற இருவரால் பட்டப்பகலில் கடத்தப்படுகிறார்கள். கடத்திய கார் விபத்துக்குள்ளாக, குழந்தைகள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். தில்லி மட்டுமல்லாமல் இந்தியாவே இந்தச் செயலைப் பார்த்து அதிர்ந்தது. கொலைகாரர்கள் மீதான வழக்கு விரைந்து நடத்தப்பட்டு 1982ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள்.


***

1990ம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது ஹீதல் பரேக் என்ற சிறுமி தனஞ்சய் சட்டர்ஜி என்ற வீட்டு பாதுகாவலரால் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக வழக்கு தொடரப்பட்டு 2004ம் ஆண்டில் தனஞ்சய் தூக்கிலிடப்பட்டார்.

***

2000ம் ஆண்டு தர்மபுரியில் கல்லூரி பேருந்து ஒன்று அரசியல் போரட்டத்தில் எரிக்கப்பட்டது. மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் இறக்க நேரிட்டது. தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்திய இந்தக் குற்றத்திற்கு 2007ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 2010ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


***

1998ம் ஆண்டு சென்னையில் சரிகா ஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி இளைஞர்கள் சிலரின் சீண்டலில் இருந்து தப்பிக்க முயன்றதில், விபத்தில் பலியானார். தமிழகமே கொந்தளித்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு பெண்களை சீண்டுவதற்கு எதிரான கடுமையான சட்டம் பிறப்பித்தது.


***

1999ம் ஆண்டு புது தில்லியில் ஜெஸிக்கா லால் என்ற மாடல் உயர் ரக கேளிக்கை விடுதி ஒன்றில் மனு சர்மா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக மனு சர்மா கைது செய்யபப்ட்டாலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொந்தளித்தது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, உச்சநீதிமன்றத்தால் 2010ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

மனு சர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பேரன்.

***

1996ம் ஆண்டு புது தில்லியில் பிரியதர்ஷினி மட்டூ என்ற 25 வயது சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொதித்து எழுந்தது. தில்லி உயர்நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அக்டோபர் 2010ல் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.


சந்தோஷ்குமார் சிங்கின் தந்தை பாண்டிச்சேரியின் காவல் துறைத் தலைவராக இருந்தவர் (IG of Police).

***

1990ம் ஆண்டு சண்டிகரில் ருசிகா கிர்கோத்ரா என்ற 14 வயது சிறுமி பிரதாப் சிங் ரத்தோர் என்பவரால், டென்னிஸ் பயிற்சியின் போது சீண்டப்படுகிறார் (molest). பின்னர் ரத்தாரால் ருசிகாவின் குடும்பம் பலவித இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியாக 1993ல் ருசிக்காவின் சகோதரர் பொய்வழக்கு ஒன்றில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்படுகிறார். மனமுடைந்த ருசிகா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ருசிகா தற்கொலை செய்து கொண்ட அன்று ரத்தோர் கேளிக்கை விருந்து ஒன்றின் மூலம் கொண்டாடுகிறார். சிலமாதங்களில் அவர் ஹரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைவராக பொறுப்பு ஏற்கிறார். பின்னர் அவர் மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.

1998ல் ருசிகா வழக்கினை விசாரிக்க சி பி ஐக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 2009ல் ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊடகங்கள் பெரிய அளவில் இதனை செய்தியாக்க மேல் முறையீட்டில் தண்டனை 18 மாதங்கள் என அதிகரிக்கப்பட்டு முதல் முறையாக ரத்தோர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 11/11/10 அன்று உச்ச நீதிமன்றம் ரத்தோரை பிணையில் விடுவித்துள்ளது.

ருசிகாவின் தந்தை ரத்தோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.

***

2006ம் ஆண்டில் நோய்டாவில் 7 வயது முதல் 12 வயது வரையிலான பல (எழைக் குழந்தைகளை பாலியல் பலாத்காரப்படுத்தி கொன்றதாக மனிந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபர் மீதும் கோலி என்ற அவரது வேலையாள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 2009ல் விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. சில மாதங்களில் உயர்நீதிமன்றம் பாந்தரை விடுதலை செய்தது. வேலையாள் கோலி மீதான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பாந்தர் மீது மேலும் 5 கொலை வழக்குகள் உள்ளன.


ஏறக்குறைய 40 குழந்தைகள் அந்தப் பகுதியில் 2005 முதல் 2007 வரை காணாமல் போயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் படங்கள் கிடைக்கவில்லை…


தொழிலதிபர் பாந்தர் காவலர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வதாக, தெகல்கா மட்டும் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

***

பிப்ரவரி’ 2008. பட்டாலா மாவட்டம், பஞ்சாப். தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தலித் சிறுமி சோனு மாஸி, பிந்தா மாஸி என்ற இரு சகோதரர்களால், கடத்தப்பட்டு பலாத்காரப்படுத்தப்பட்டு கொன்று விட்டனர். காவலர்கள் சகோதரர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


நவம்பர்’2008. கான்பூர் மாவட்டம். உத்தர பிரதேசம். 16 வயது தலித் சிறுமி மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். புனீத், சுனில், நரேஷ் என்ற இளைஞர்களை காவலர்கள் தேடி வந்தனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஆகஸ்ட்’2009. பீட் மாவட்டம், மஹாராஷ்டிரா. சுமிதா பவார் என்ற 15 வயது தலித் சிறுமி கோவில் அர்ச்சகர் மற்ற இருவரால் பலாத்காரப்படுத்தப்பட்டார். காவலர்கள் வழக்கினை பதிவதற்குப் பதிலாக, சுமிதாவை அடித்து துன்புறுத்தினர். தற்பொழுது, வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’2009. கேந்தரபாரா, ஒரிஸ்ஸா. 16 வயது தலித் சிறுமியை பணம் கேட்டு கடத்திய காந்தியா மாலிக் அவளை பலாத்காரப்படுத்தி பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் கண் எதிரிலியே அவளை உயிரோடு எரித்துக் கொன்றார். சிறுமியை கடத்திய பின்னர் புகாரினை விசாரிக்க மறுத்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாலிக்கை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. நீல்கிரி, ஒரிஸ்ஸா. 6 வயது தலிச் சிறுமியை அவரது 20 வயது உறவினர் கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி கொன்று விட்டார். ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. கான்பூர் மாவட்டம். உத்திரபிரதேசம். 15 வயது தலித் சிறுமி இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த புகாரை வாங்க மறுத்ததால், சிறுமி தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது வழக்கு பதிவு செய்து இளைஞரை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.




செப்டம்பர்’ 2010. மாண்ட்லா, மத்திய பிரதேசம். ஆறு இளைஞர்கள் 14 வயது தலித் சிறுமியை கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து, அதனை செல்லிடைப் பேசியில் படம் பிடித்து சுற்றில் விட்டனர். அதன் மூலம் குற்றம் வெளியே தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஏப்ரல்’2010. புது தில்லி. தன்னிடம் பாடம் படித்த 8 வயது தலித் சிறுமியை பலாத்காரப்படுத்தி கொன்ற டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசு தரப்பு வாதம் ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை’ என்று நிராகரிக்கப்பட்டது


***

ஏன் இவை அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்று சந்தேகம் கொள்பவர்கள், கூகுளில் “Minor Dalit, Rape, Murder” என்ற வார்த்தைகளை கொடுத்து தேடி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.



மதுரை
121110

No comments: